Total Pageviews

Friday, October 15, 2010

மாங்குடி மாறிய கதை!



மாங்குடி மாறிய கதை!
september 2010


சமீபத்தில் ஒரு ஆவணப்படத்திற்காக மாங்குடி சென்றிருந்தோம்...
தலைமை ஆசிரியர் திரு.ஜோதிமனி அவர்கள் தமிழநாட்டின் Paulo Freire என்றே கூறவேண்டும்....



ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.


கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.

எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.

தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.

அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.

அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”

பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...

இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!

லைவ் ஃப்ரம் மாங்குடி!

எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.

உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.

“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.

சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.

மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.